Friday, January 30, 2009
சிக்கலில் எம்.ஜி.ஆர் படங்கள்!
MGR எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி நடித்த புகழ் பெற்ற படங்களான 'அடிமை பெண்', 'நாடோடி மன்னன்' மற்றும் 'உலகம் சுற்றும் வாலிபனுக்கு' மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த படங்களுக்கு உரிமை கோரி எம்.ஜி.ஆர். பிக்சர்ஸும், கவிதா பிலிம்ஸும் வழக்கு தொடர்ந்தன. பத்து ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த இந்த வழக்கில், அந்தப் படங்கள் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸுக்குதான் சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம், படங்களை திரையிட ஓ.கே பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தது.
சமீபத்தில் இந்தப் படங்கள் தமிழகமெங்கும் தியேட்டர்களில் வெளியானது. தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. இந்த நிலையில் ஒப்பந்தப்படி ஓ.கே பிலிம்ஸ் பணம் தரவில்லை. அதனால் படத்தை அவர் திரையிடவோ தொலைக்காட்சிக்கு கொடுக்கவோ தடை விதிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் நிர்மலா ரவீந்திரன் உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெய்பால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் வழக்கறிஞர் ரமேசும், தனியார் தொலைக்காட்சி சார்பில் வழக்கறிஞர் ஹரிசங்கர் கிருஷ்ணசாமியும் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ஓ.கே.பிலிம்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந் நிலையில் கவிதா பிலிம்ஸ் உரிமையாளர் ராஜமாணிக்கம் எம்.ஜி.ஆர் படங்கள் மீது மறுசீரமைப்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் எம்.ஜி.ஆரின் இந்த மூன்று புகழ்பெற்ற படங்களை திரையிடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment